Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி நீர் பிரச்சனையில் திமுக இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டியுள்ள தமிழக வெற்றிக் கழகம், மக்கள் நலனை முன்னிறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில்,
விவசாயிகளின் நலனுக்காகவும், கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் தமிழக முதலமைச்சர் விஜய் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றிய அரசில் பங்கேற்ற பல்வேறு காலகட்டங்களில் காவிரி பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண திமுக முயற்சி எடுக்கவில்லை என்றும், காவிரி விவகாரத்துக்காக ஒரு முறை கூட அமைச்சர் பதவியை துறக்கவில்லை என்றும் தவெக குற்றம்சாட்டியுள்ளது.
ஆட்சியில் இருந்தபோது காவிரி விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காத திமுக, தற்போது ஆட்சியில் இல்லாத நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக உரிமைக் குரல் எழுப்புவதாகவும் அந்தப் பதிவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவிரி பிரச்சனையில் அரசியல் விமர்சனங்களைத் தவிர்த்து, மக்கள் நலனை மையமாகக் கொண்டு மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும், காவிரி விவகாரத்தில் திமுக மேற்கொள்வதாகக் கூறப்படும் அரசியல் அணுகுமுறையை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் தமிழக வெற்றிக் கழகம் தனது பதிவில் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P