Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள வழக்கறிஞர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு எதிரான வழக்குகளின் தன்மை குறித்து குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் கண்ணன்குறிச்சி காவல் நிலையத்தில், டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ஜெகதீஷ்வரன் தாக்கல் செய்த மனு, நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர்கள் நீதித்துறையின் முக்கிய அங்கமாக இருப்பவர்கள் என்றும், அவர்கள் குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் சூழல் உருவானால், நீதி கேட்டு வரும் பொதுமக்களின் நம்பிக்கையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் வேதனை தெரிவித்தார்.
மேலும், அதிகளவில் வழக்கறிஞர்கள் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருந்தால், அது வழக்கறிஞர் தொழிலின் நற்பெயருக்கும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கைக்கும் குந்தகம் ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதையும், வழக்கறிஞர் சங்க நிர்வாகப் பொறுப்புகளை வகிப்பதையும் தடுக்கும் வகையில் உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என இந்திய பார் கவுன்சிலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலும் பரிசீலிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அத்துடன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எத்தனை வழக்கறிஞர்கள் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளனர், அந்த வழக்குகள் அவர்கள் வழக்கறிஞராக சேருவதற்கு முன்பா, சேர்ந்த பிறகா அல்லது தொழிலில் இருந்தபோதே பதிவு செய்யப்பட்டவையா என்பது குறித்து குழு அமைத்து விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பார் கவுன்சிலுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam