Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 01 ஆகஸ்ட் (ஹி.ச)
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது.
இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அருவிகளிலும் குளிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் அருவிக்கு அருகில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.
இது போன்ற சமயங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டு, நீர்வரத்து சீரான பின்னர் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்படும்.
தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் அருவிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை மற்றும் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை அருவிகளுக்கு செல்லாமல் தடுத்து வருகின்றனர்.
நீர்வரத்து குறைந்து இயல்பு நிலை திரும்பிய பிறகே மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விடுமுறை தினமான இன்று ஆவலுடன் நீராட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
Hindusthan Samachar / vidya.b