Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் ஆளும் கட்சியான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக 15 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க சதித்திட்டம் நடப்பதாக ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளித்தார்.
அதன்படி திருவல்லிக்கேணி போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர்.
இதனையடுத்து, சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்கள். முறைப்படி, முன்ஜாமீனை செந்தில்பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் பெற்றுக்கொண்டனர்.
முன்ஜாமீன் நிபந்தனையில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் காலையிலும், மாலையிலும் ஆஜராகி, கையெழுத்திடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் நிபந்தனையில் கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர்.
அவர்கள் இருவரிடமும், திருவல்லிக்கேணி போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். வழக்குதொடர்பாக போலீசார் கைப்பற்றியுள்ள ஆவணங்களை காட்டி, 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தான், டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர்.
இதன் காரணமாக காவல்துறையினர் கைது செய்வதற்கு வாய்ப்பிருப்பதால், கடந்த 2 நாட்களாக செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் இன்று காலை திருவல்லிக்கேனி காவல் நிலையத்தில் ஆஜரானார்.
அவருடன் அவரது சகோதரர் அசோக்குமாரும் கையெழுத்திட ஆஜராகி உள்ளார்.
இதனையடுத்து, திருவல்லிக்கேனி போலீசார் செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b