Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
இதன் காரணமாக பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பல இடங்களில் வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாநிலத்தின் 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
அதன்படி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA