கொளத்தூர் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பில் முறைகேடு - என்.ஆர். இளங்கோ
சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சரிபார்ப்பு பணிகளின்போது பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ, இந்த விவகாரத்தில் உரிய நிவாரண
DMK MP N R Elango


சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சரிபார்ப்பு பணிகளின்போது பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ, இந்த விவகாரத்தில் உரிய நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் 'Burnt மெமரி' மற்றும் மைக்ரோகண்ட்ரோலர் சரிபார்ப்பு பணிகள் கடந்த ஜூலை 29 முதல் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது மறுவாக்கு எண்ணிக்கை அல்ல; இயந்திரங்களின் தொழில்நுட்ப சரிபார்ப்பு மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.

ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தலா ஒரு வாக்காளர் சரிபார்ப்பு தாள் அச்சிடும் இயந்திரம் (VVPAT) செயல்படவில்லை என்றும், இன்று 157-வது வாக்குச்சாவடி மையத்தைச் சேர்ந்த இயந்திரம் ஆய்வுக்காக எடுக்கப்பட்டபோது பல்வேறு சந்தேகத்துக்கிடமான அம்சங்கள் கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, VVPAT மற்றும் கட்டுப்பாட்டு அலகின் (Control Unit) முகவரிச் சீட்டுகள் (Address Tags) நிரப்பப்படாமல் இருந்ததாகவும், அவை புதியதாக இருந்ததாகவும், மெழுகு முத்திரை (Wax Seal) இயந்திரத்தின் முன்புறத்தில் முறையற்ற வகையில் ஒட்டப்பட்டிருந்ததால் இயந்திரங்களின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து கடுமையான சந்தேகம் எழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆய்வுக்கு எடுத்த 8 இயந்திரங்களில் 3 இயந்திரங்களில் கோளாறு இருப்பதால், நியாயமான மற்றும் வெளிப்படையான சரிபார்ப்பு நடைமுறையை உறுதிப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகக் கூறிய அவர், இதனைத் தொடர்ந்து திமுக பிரதிநிதிகள் சரிபார்ப்பு பணியில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இயந்திரங்களை முறையாக சீலிட்டு பாதுகாக்குமாறு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், உரிய சட்ட நிவாரணம் பெற நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் என்.ஆர். இளங்கோ தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P