Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதுரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் இருந்து ரசாயன நெடி வீசுவதாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து மதுரை ஆவின் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 160 பாலித்தீன் பிலிம் ரோல்களை மதுரை ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஆவினுக்கு பால் பாக்கெட் தயாரிக்கும் பாலிமர் பிலிம்களை சப்ளை செய்து வரும் பெங்களூருவைச் சேர்ந்த திருமூர்த்தி பாலிகெம் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ரோல்களில் தான் இந்த குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக மதுரை மாவட்டத்தில் விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளை பிரித்தபோது வழக்கத்திற்கு மாறாக ரசாயன நெடி வீசுவதாக நுகர்வோர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆவின் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், பாலித்தீன் பிலிம் ரோல்களில் இருந்தே அந்த நெடி வருவது உறுதி செய்யப்பட்டது. பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, குறைபாடுள்ள 160 ரோல்களையும் உடனடியாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்து, அவற்றை மீண்டும் பெங்களூரு நிறுவனத்திற்கே திருப்பி அனுப்ப மதுரை ஆவின் நிர்வாகம் முடிவு செய்தது.
மேலும், தரமற்ற பிலிம் ரோல்களை வழங்கிய பெங்களூரு திருமூர்த்தி பாலிகெம் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என மதுரை ஆவின் சார்பில் தலைமை நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b