Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் 'எண்வகை மருந்து சாற்றுதல்' நிகழ்வு தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடுகள் கோவிலில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் எண்வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது.
ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கும் இந்த ஆன்மிக நிகழ்வு, தொடர்ந்து ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். இந்த காலகட்டத்தில், பரிவார மூர்த்திகளுக்கு எண்வகை மூலிகை மருந்துகள் சாற்றப்பட்டு, அவை அசையாமல் பாதுகாக்கப்படும். ஆகம விதிகளின்படி கும்பாபிஷேகத்திற்கு முன் மேற்கொள்ளப்படும் முக்கிய சடங்குகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை பணிகளும் நடைபெற உள்ளன. இதையொட்டி, பக்தர்கள் கோவில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒத்துழைக்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN