Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகள் முழுமையாக வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், 2-வது நாளாகவும் அரசு பேருந்தில் மாஞ்சோலைக்கு செல்ல முயன்ற தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வனத்துறையினர் மணிமுத்தாறு சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி அறிவுறுத்தினர்.
வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அரசு பேருந்தில் மாஞ்சோலைக்கு திரும்ப முயன்றபோது, வனத்துறையினர் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகள் தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அப்பகுதியில் தொடர்ந்து குடியிருக்க அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தனர்.
மேலும், தமிழக அரசின் மறுவாழ்வு மற்றும் நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு குடியிருப்புகளை விரைந்து காலி செய்ய வேண்டும் என்றும், அதற்கான உதவிகளைப் பெற சார்ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, தாங்கள் மாஞ்சோலைக்குள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தியதால், வனத்துறையினருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் மணிமுத்தாறு சோதனைச் சாவடி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மாஞ்சோலை பகுதியில் குடியிருந்த தொழிலாளர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதிக்குள் நுழைவு மற்றும் குடியிருப்பு தொடர்பான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன. இதனால் தொழிலாளர்கள் மற்றும் வனத்துறையினருக்கு இடையே பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam