ரிவர்ஸ் கியரில் இருந்த ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் மீது விழுந்து விபத்து
திருவாரூர், 01 ஆகஸ்ட் (ஹி.ச.) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், ரிவர்ஸ் கியரை மாற்றாமல் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தபோது ஏற்பட்ட விபத்தில், ஆட்டோ டிரைவர் மீது ஆட்டோ கவிழ்ந்து பலத்த காயமடைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி
விபத்து


திருவாரூர், 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், ரிவர்ஸ் கியரை மாற்றாமல் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தபோது ஏற்பட்ட விபத்தில், ஆட்டோ டிரைவர் மீது ஆட்டோ கவிழ்ந்து பலத்த காயமடைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மன்னார்குடியைச் சேர்ந்த சங்கர் (50) என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். மன்னார்குடி தாமரைக்குளம் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் வாடகை ஆட்டோவை இயக்கி வந்துள்ளார்.

சம்பவத்தன்று வழக்கம்போல் சவாரி முடித்து வந்த சங்கர், ஆட்டோவை ரிவர்ஸ் கியரில் நிறுத்தியிருந்தார். ஆனால், ரிவர்ஸ் கியரை மாற்றாமல் விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மீண்டும் சவாரி வந்ததால், ஆட்டோவின் பின்புறத்தில் உள்ள என்ஜினை கயிறு மூலம் ஸ்டார்ட் செய்ய முயன்றார்.

அப்போது ஆட்டோ ஸ்டார்ட் ஆனதும், ரிவர்ஸ் கியரில் இருந்ததால் திடீரென பின்னோக்கி வேகமாக நகர்ந்தது. இதில் ஆட்டோ சங்கர் மீது மோதியதில் அவர் நிலைதடுமாறி அருகில் இருந்த சிமெண்ட் வாய்க்காலில் விழுந்தார். தொடர்ந்து பின்னோக்கி வந்த ஆட்டோ அவர் மீது கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சங்கருக்கு நெஞ்சு எலும்பு முறிவு உள்ளிட்ட பலத்த காயங்கள் ஏற்பட்டன. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கிருந்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டு முதலில் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக மன்னார்குடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரிவர்ஸ் கியரை மாற்றாமல் ஆட்டோவை ஸ்டார்ட் செய்ததால் ஏற்பட்ட இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam