மேகதாது அணைக்கு எதிர்ப்பு - ஒகேனக்கலில் தே.மு.தி.க ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, 01 ஆகஸ்ட் (ஹி.ச.) கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தடையின்றி வழங்க வலியுறுத்தியும், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தேமுதிக சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற
ஆர்ப்பாட்டம்


தர்மபுரி, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தடையின்றி வழங்க வலியுறுத்தியும், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தேமுதிக சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கட்சி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு, விவசாயிகளின் நலனுக்காக போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக, தமிழக–கர்நாடக எல்லைப் பகுதியில் காவிரி நதி தமிழகத்திற்குள் நுழையும் பிலிகுண்டுலூ பகுதிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சென்று காவிரி நீரின் வரத்தை பார்வையிட்டனர்.

அங்கு காவிரி நீர் தமிழகத்திற்கு எப்போதும் தடையின்றி பெருக்கெடுத்து வர வேண்டும் என்று வேண்டிக்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், காவிரி நீரை கையில் ஏந்தி தனது மீதும், கட்சித் தொண்டர்கள் மீதும் தெளித்தார்.

பின்னர் அந்த நீரை மீண்டும் காவிரி ஆற்றில் ஊற்றி, காவிரி உரிமையை காப்போம், மேகதாது அணைத் திட்டத்தை கைவிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பி போராட்ட உறுதிமொழி எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஒகேனக்கலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்று, மேகதாது அணைத் திட்டத்திற்கு மத்திய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்றும், தமிழகத்தின் நீர்வள உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையும் மேகதாது திட்டத்திற்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, திட்டத்திற்கு தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam