Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
மத்திய கிழக்கில் அமெரிக்கா- ஈரான் இடையே, மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளிகளை கடந்து செல்லும், பல்வேறு நாடுகளின் விமான சேவைகள், பாதிக்கப்பட்டுள்ளன.
இதை அடுத்து ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து, சென்னைக்கு வரும் பல்வேறு விமான சேவைகள், பல மணி நேரம் வரை, தாமதமாக வந்து சேர்கின்றன.
அதன்படி நள்ளிரவு 12.45 மணிக்கு, அபுதாபியில் இருந்து, சென்னை வரவேண்டிய ஏர் அரேபியா விமானம், இன்று அதிகாலை 2.25 மணிக்கும், அதிகாலை 1.10 மணிக்கு, அடிஸ் அபாபாவில் இருந்து, சென்னை வரவேண்டிய எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 2.15 மணிக்கும், அதிகாலை 2.30 மணிக்கு, துபாயிலிருந்து சென்னை வரவேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 4.40 மணிக்கும், அதிகாலை 3.25 மணிக்கு, சார்ஜாவில் இருந்து, சென்னை வர வேண்டிய ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம், காலை 7.40 மணிக்கும், அதிகாலை 4.25 மணிக்கு, அபுதாபியில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் அரேபியா விமானம், காலை 9.40 மணிக்கும், குவைத்தில் இருந்து, அதிகாலை 5.15 மணிக்கு, வரவேண்டிய குவைத் ஏர்லைன்ஸ் விமானம், காலை 6.30 மணிக்கும், துபாயிலிருந்து காலை 8.05 மணிக்கு, வர வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், காலை 9.15 மணிக்கும், அபுதாபியில் இருந்து காலை 8.15 க்கு, வரவேண்டிய எத்தியாட் ஏர்லைன்ஸ் விமானம், காலை 10.15 மணிக்கும், காலை 10.25 மணிக்கு, அபுதாபியில் இருந்து சென்னை வரவேண்டிய, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று பகல் 1.50 மணிக்கும், இவ்வாறு 10 விமானங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.
அதை போல் சென்னையில் இருந்து, இந்த நாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் 10 விமானங்களும், தாமதமாக புறப்பட்டு சென்றன.
இதைப் போல் ஒவ்வொரு வருகை மற்றும் புறப்பாடு விமானங்களும், ஒரு மணி நேரத்தில் இருந்து, 5 மணி நேரம் வரை, தாமதமாக, சென்னைக்கு வந்துவிட்டு, தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.
இதனால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
இதைப்போல் பயணிகள் விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதமானால், இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள், விமானங்கள் தாமதம் குறித்து, விமான நிலைய டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் குரூப்களில் அது பற்றிய தகவல்களை வெளியிடுவார்கள். அது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
ஆனால் இன்று அதை போல், எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. இதனால் பயணிகள், விமானங்கள் எவ்வளவு நேரம் தாமதம்? எப்போது வரும்? எப்போது சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்? என்பது தெரியாமல், பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
Hindusthan Samachar / ANANDHAN