நெல்லை தோட்டக் காவலாளி உயிரிழந்த சம்பவம் எதிரொலி – கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
நெல்லை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே வடமலைசமுத்திரம் பகுதியில் கரடி தாக்கி தோட்டக் காவலாளி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இர
கரடி


நெல்லை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே வடமலைசமுத்திரம் பகுதியில் கரடி தாக்கி தோட்டக் காவலாளி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு தோட்டக் காவலாளி முருகன் கரடி தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற தோட்டம் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரடியின் நடமாட்டம் மற்றும் அது வந்து செல்லும் பாதைகளை கண்டறிய கூடுதல் வனப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கரடியை உயிருடன் பிடிக்கும் வகையில் கூண்டு அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக வன மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, கரடியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே, வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் தேவையின்றி வன எல்லைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கரடி தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கரடியை விரைவில் பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வடமலைசமுத்திரம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam