Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது.
சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. கோவில்பட்டி அருகே வந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 4 பெண்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b