Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
பல்வேறு அமர்வுகளாக நடைபெற்ற இந்த பயிற்சி முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிறைவு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் கட்சியின் எதிர்கால அரசியல் செயல்திட்டங்கள், அமைப்பு வலுப்படுத்தல், தேர்தல் பணிகள், மக்களுடன் இணைந்து செயல்படும் நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார்.
பின்னர் முகாமில் பேசிய ராகுல் காந்தி,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சி பெறாததற்கு முக்கிய காரணம் உட்கட்சி பூசலும், பல்வேறு அணிகளாக செயல்படும் போக்கும் தான் என்று தெரிவித்தார்.
கட்சிக்குள் ஒற்றுமை ஏற்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே காங்கிரஸ் மீண்டும் வலுவான அரசியல் சக்தியாக உருவெடுக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் டெல்லி தலைமையகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத் தலைவரும், நிர்வாகியும் கட்சிக்காக மேற்கொள்ளும் பணிகள், மக்களுடனான தொடர்பு, அமைப்பு வளர்ச்சிக்கான முயற்சிகள் அனைத்தும் தலைமையின் கவனத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்..
கட்சி நிர்வாகிகளை மதித்து, அவர்களுடன் இணைந்து செயல்படுவது ஒவ்வொரு தலைவரின் கடமை.
நிர்வாகிகளை புறக்கணிக்கும் அல்லது அவர்களுடன் இணைந்து செயல்படாத தலைவர்களுக்கு இனி காங்கிரஸ் கட்சியில் இடமில்லை என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.
அனைத்து நிர்வாகிகளும் ஒரே அணியாக செயல்பட்டால்தான் கட்சியின் வளர்ச்சி சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.
புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்கள் அனைவரும் மாநில மற்றும் தேசிய தலைமையின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தனிப்பட்ட கருத்துகளை விட கட்சியின் நலனே முதன்மை என்ற எண்ணத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டை கடுமையாக பாதிக்கும் என்றும், இது வெறும் அரசியல் விவகாரம் அல்ல; தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் எதிர்காலத்துடன் தொடர்புடைய முக்கியமான பிரச்சினை என்றும் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறையை ஒவ்வொரு மாநிலக் கட்சியும், தேசியக் கட்சியும் இணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள் என்று கடுமையாக விமர்சித்த அவர், இந்த நடைமுறை தமிழ்நாடு மக்களிடமிருந்து அரசியல் அதிகாரத்தை பறிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தின் உரிமைகளையும், மக்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றும் ராகுல் காந்தி உறுதியளித்தார்.
Hindusthan Samachar / Durai.J