Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளுக்கு நடப்பு மாத மின்கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளதாகக் கூறி, அதனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதியின்படி மாதந்தோறும் 200 அலகுகள் இலவச மின்சாரம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தவெக அரசு 200 அலகுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தை விட 4 மடங்கு வரை மின்கட்டணம் உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் மின் அளவீடு தாமதமாக மேற்கொள்ளப்பட்டதும், பழுதான மின் அளவீட்டுக் கருவிகள் குறித்த புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாததுமே கட்டண உயர்வுக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுவதாக சீமான் கூறியுள்ளார்.
மேலும், 200 அலகுகள் இலவச மின்சாரத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்காத வகையில் திட்டமிட்டே மின் அளவீடு தாமதப்படுத்தப்பட்டதோ என்ற சந்தேகமும் எழுவதாக குறிப்பிட்டுள்ளார். தாமதமான கணக்கீட்டால் மின் பயன்பாடு 500 அலகுகளைத் தாண்டியதால், 200 அலகுகள் இலவச மின்சாரச் சலுகை கிடைக்காததோடு, ஒரு அலகுக்கான கட்டண விகிதமும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் 200 அலகுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு மாதங்களுக்கு 200 அலகுகள் இலவசம் என்றும், அதுவும் 500 அலகுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே என்றும் அறிவித்து அரசு மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் சீமான் விமர்சித்துள்ளார்.
மேலும், மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், மின்னிலக்க (ஸ்மார்ட்) மின் மீட்டர்களை விரைந்து பொருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இறுதியாக, மின் கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் மின்கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதியின்படி மாதந்தோறும் 200 அலகுகள் இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P