Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சின்ன சுருளி அருவியில் தொடர் சாரல் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேகமலை அடிவாரத்தில், கோம்பைத்தொழு வடக்கு மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவி, மேகமலை–ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் நீர்வரத்து காணப்படும் இந்த அருவிக்கு தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஏற்கனவே பெய்த கனமழையால் அருவிக்குச் செல்லும் மலைச்சாலை பல இடங்களில் மண் அரிப்பால் சேதமடைந்துள்ளது. மேலும், படிக்கட்டுகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புக் கம்பிகளும் உடைந்துள்ளதால் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வனத்துறை முன்பே தடை விதித்திருந்தது.
தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்லவும், குளிக்கவும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி சின்ன சுருளி அருவி பகுதிக்குள் நுழைபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி வனத்துறையின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam