Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
கடந்த மே 4-ம் தேதி வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில், உத்திரமேரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட க.சுந்தர் 70,694 வாக்குகள் பெற்றார். அவரை விட 14,223 வாக்குகள் அதிகமாக, 84,917 வாக்குகள் பெற்று தவெக வேட்பாளர் முனிரத்தினம் வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய திமுக வேட்பாளர் க.சுந்தர், தொகுதியில் உள்ள 10 குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) சரிபார்க்க தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார்.
இதற்கான கட்டணத்தை செலுத்தியதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில், பெல் நிறுவன பொறியாளர்கள் முன்னிலையில் கடந்த மூன்று நாட்களாக சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கிடங்கிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சரிபார்ப்பு தொடங்கும் முன், தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி மாதிரி வாக்குகள் பதிவு செய்து இயந்திரங்கள் செயல்படுவதை அதிகாரிகள் விளக்கிக் காட்டினர்.
அப்போது, தேர்தல் நடைபெற்ற நாளில் விவிபேட்டில் (VVPAT) பதிவான வாக்குச்சீட்டுகளையும் எண்ணி ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று திமுக வேட்பாளர் க.சுந்தர் வலியுறுத்தினார்.
ஆனால் தேர்தல் ஆணைய விதிகளின்படி அவ்வாறு செய்ய முடியாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது ஆட்சேபனையை எழுத்துப்பூர்வமாக அளித்த க.சுந்தர், அதன் பின்னர் நடைபெற்ற சரிபார்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை.
நேற்றுடன் சரிபார்ப்பு பணி நிறைவடைய இருந்த நிலையில், 314-வது வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரத்தை விவிபேட் கருவியுடன் இணைக்க முடியாத தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டது. இதனால் அந்த இயந்திரத்தின் ஆய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சினேகா கூறுகையில்,
பழுதடைந்ததாகக் கூறப்படும் இயந்திரத்திற்குப் பதிலாக வேறு இயந்திரத்தை பயன்படுத்தி சோதிக்க வேண்டுமா அல்லது அதே இயந்திரத்தை பொறியாளர்கள் மூலம் சரிசெய்து மீண்டும் பரிசோதிக்க வேண்டுமா என்பது குறித்து ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 9 மணிக்குள் திமுக வேட்பாளர் தெரிவிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து திமுக வேட்பாளர் க.சுந்தர் கூறுகையில்,
சந்தேகத்திற்குரியதாக நாங்கள் குறிப்பிட்டது 10 இயந்திரங்களைத்தான். அவற்றில் ஒன்றை பழுதானது என்று கூறுவதை ஏற்க முடியாது. மேலும், நாங்கள் கோரியபடி விவிபேட் வாக்குச்சீட்டுகள் சரிபார்க்கப்படாததால், தற்போது நடைபெறும் நடவடிக்கை எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. எனவே இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ