Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் என்ற கோமுகி மணியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்திற்கு அதிமுக தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய அவர்,
அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை அதிமுக முழு மனதோடு ஆதரிக்கிறது என்று குறிப்பிட்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரானது அல்ல என்றும், தமிழ் மொழியின் பெருமையை போற்றும் வகையிலும், தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்தது தான் தமிழ்த்தாய் வாழ்த்து என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும் பேசிய அவர், சட்டப்பேரவையில் அனைத்து நிகழ்வுகளுக்கும் முன்னதாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்ற மரபுக்கு வித்திட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் என்பதை சுட்டிக்காட்டினார்.
ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில்தான் தமிழுக்கும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் உரிய மரியாதை அளிக்கும் வகையில் பேரவையில் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.
இந்த தீர்மானம் தமிழ் மொழியின் பெருமையை மேலும் உயர்த்தும் என்றும், இதற்கு அதிமுக என்றும் துணை நிற்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது உரையில் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / vidya.b