ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் கோடை வெயிலை காரணம் காட்டுவதா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி
தமிழ்நாடு, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில்
அன்புமணி


தமிழ்நாடு, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

ஆவின் நிறுவனம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தினமும் 31 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக விற்பனை படிப்படியாக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் ஆவின் பால் விற்பனை மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் சுமார் 20 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆவின் பால் தட்டுப்பாட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் நிறுவனங்களின் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆவின் பாலுடன் ஒப்பிடுகையில் தனியார் நிறுவனங்களின் பால் லிட்டருக்கு ரூ.16 முதல் ரூ.24 வரை அதிகமாக இருப்பதால், ஏழை குடும்பங்கள் மாதத்திற்கு குறைந்தது ரூ.750 வரை கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆவின் பால் கொள்முதல் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

2021-ஆம் ஆண்டு தினமும் 41 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல், 2022-ல் 38 லட்சம் லிட்டராகவும், 2023-ல் 30 லட்சம் லிட்டராகவும் குறைந்து, தற்போது 28 லட்சம் லிட்டராக சரிந்துள்ளதாக கூறியுள்ளார்.

பால் கொள்முதல் குறைந்ததற்கு முக்கிய காரணம் கொள்முதல் விலை உயர்த்தப்படாததே என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு ரூ.44 என்ற கொள்முதல் விலையுடன் ரூ.3 ஊக்கத்தொகை வழங்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் இதைவிட லிட்டருக்கு ரூ.12 வரை கூடுதல் விலை வழங்கி பால் கொள்முதல் செய்வதாக அவர் கூறியுள்ளார்.

எனவே, கோடை வெப்பத்தால் பால் உற்பத்தி குறைந்ததே தட்டுப்பாட்டுக்கு காரணம் எனக் கூறி பிரச்சினையை கடந்து செல்லாமல், ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சிக்கான உண்மையான காரணத்தை அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஆவின் பால் தடையின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam