தேசிய செவிலியர் பதிவு திட்டத்தில் 12% பேர் மட்டுமே பதிவு - பாஜக அரசுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்
சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) தேசிய செவிலியர் பதிவு மற்றும் கண்காணிப்பு முறைமை (NRTS) திட்டம் தொடங்கி 7 ஆண்டுகள் கடந்தும், நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு செவிலியர்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
மாணிக்கம்


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

தேசிய செவிலியர் பதிவு மற்றும் கண்காணிப்பு முறைமை (NRTS) திட்டம் தொடங்கி 7 ஆண்டுகள் கடந்தும், நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு செவிலியர்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

நாட்டிலேயே அதிக செவிலியர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில், மொத்தம் 4 லட்சத்து 76 ஆயிரத்து 264 பதிவு செய்யப்பட்ட செவிலியர்களில், வெறும் 57 ஆயிரத்து 84 பேர் மட்டுமே NRTS அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதன்படி, தமிழ்நாட்டில் சுமார் 12 சதவீத செவிலியர்கள் மட்டுமே தேசிய பதிவில் இடம்பெற்றுள்ளதாகவும், 4.19 லட்சத்துக்கும் அதிகமான செவிலியர்களின் விவரங்கள் இன்னும் ஒன்றிய அரசின் பட்டியலில் பதிவேற்றப்படாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தொழிலும்சார் செவிலியர் சங்கத்தின் (IPNA) இணைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்திய செவிலியர் கவுன்சிலின் போதிய மேலாண்மையின்மை மற்றும் பொறுப்பின்மையே இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தேசிய பதிவில் விவரங்கள் இல்லாததால், மாநிலங்களுக்கு இடையே பணியிட மாற்றம் செய்யவும், புதிய பணியில் சேரவும் தேவையான தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெற செவிலியர்கள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் பணிபுரிய விரும்பும் செவிலியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களின் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒன்றிய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா உடனடியாக தலையிட்டு, விடுபட்ட அனைத்து செவிலியர்களின் பதிவுகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்றும், அடுத்த 6 மாதங்களுக்குள் அனைத்து செவிலியர்களுக்கும் தேசிய தனித்துவ அடையாள அட்டை (NUID) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

‘டிஜிட்டல் இந்தியா’ என பெருமை பேசும் ஒன்றிய பாஜக அரசு, நாட்டின் சுகாதாரத் துறையின் முக்கியத் தூண்களாக உள்ள செவிலியர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P