ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு - பரிசல் இயக்கத்திற்கு தடை விதிக்க வாய்ப்பு
தருமபுரி, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 8 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால் அருவி
Cauvery water inflow at Hogenakkal rises to 8,000 cusecs


தருமபுரி, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 8 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் முதன்மை அருவி, ஐந்தருவி, சினிஃபால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனிடையே பாதுகாப்பு கருதி ஒகேனக்கல்லில் பரிசல் சவாரிக்கு தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. வழக்கமாக நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியை தாண்டினால் பரிசல் இயக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.

எனவே நீர்வரத்தின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுக்கவோ வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b