Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
துபாயிலிருந்து, சென்னை வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று திங்கள் கிழமை அதிகாலை, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்கத்துறையின் ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், தீவிரமாக கண்காணித்து கொண்டு இருந்தனர்.
அப்போது ஜன்னத் ஹம்சா (34) என்ற இந்திய பெண் பயணி ஒருவர், இந்த விமானத்தில், துபாயிலிருந்து, சென்னை வந்திருந்தார். அவருடைய நடவடிக்கைகள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதை அடுத்து அந்தப் பெண் பயணியை சுங்க அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், அவர் மாறி மாறி பேசினார்.
இதை அடுத்து அந்தப் பெண் பயணியை வெளியில் விடாமல், சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அவருடைய உடமைகளை முழுமையாக பரிசோதித்தனர்.
ஆனால் உடமைகளில் எதுவும் இல்லை. இதை அடுத்து பெண் சுங்க அதிகாரிகள், பயணி, ஜன்னத் ஹம்சாவை, தனி அறைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர்.
அப்போது அந்தப் பெண் பயணி, தன்னுடைய உள் ஆடைகளுக்குள், 24 கேரட் சுத்தமான தங்கப் பசையை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த பெண் பயணியிடம் இருந்து,தங்கப் பசையை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1.4 கோடி.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள், தங்கப் பசையை கடத்திக் கொண்டு வந்த பெண் பயணியை கைது செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர். இந்தப் பயணி, ஏற்கனவே அடிக்கடி துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணி விசாவில் சென்று வந்திருந்ததால், இவர் கடத்தல் குருவியை சேர்ந்தவரா? இந்த தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தார்? என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN