தாம்பரத்தில் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாலை மறியல் - ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச) மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக,
Citu


Nn


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச)

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சென்னை தாம்பரத்தில் தபால் நிலையம் அருகே சிஐடியு தென்சென்னை மாவட்டம் சார்பில் சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்து, பேருந்துகளில் ஏற்றி வருகின்றனர்.

போராட்டம் காரணமாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் இருந்து குரோம்பேட்டை, மீனம்பாக்கம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்றுள்ள தொழிற்சங்கத்தினர், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், ஜிஎஸ்டி வரி மூலம் சாமானிய மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது, அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாதது, தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தாதது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

விவசாயத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான ஒப்பந்தங்கள், விதை மசோதா, மின்சார திருத்த மசோதா உள்ளிட்ட நடவடிக்கைகள் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பாதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளர் விரோத புதிய தொகுப்புச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு C2+50% அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும், மின்சார திருத்த மசோதா 2025-ஐ திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அத்துடன், அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.42,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ளனர்.

தற்போது தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் மறியல் தொடர்வதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து பேருந்துகளில் ஏற்றி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ