Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
கடந்த ஜூன் மாதத்தில் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, காசிமேட்டைச் சேர்ந்த 7 விசைப்படகுகளை ஆந்திர மாநில மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். அவை தற்போது நெல்லூர் மாவட்டத்தின் ஜுவ்வலாடின்னே துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம் சென்னை மற்றும் ஆந்திர மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் படகுகள் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது வரை அவை விடுவிக்கப்படாததால் மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்கக் கோரி சென்னை காசிமேட்டில் மீனவர்கள் இன்று காலை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுதால் ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாகப் படகுகள் முடங்கிக் கிடப்பதால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இதில் உடனடியாக தலையிட்டு ஆந்திர அரசிடமிருந்து படகுகளை மீட்க வேண்டும் என்றும் மீனவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர்.
வேலை நிறுத்தத்தோடு மட்டுமில்லாமல், இன்று காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும் மீனவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b