திருத்தணி மார்க்கெட் அருகே பெண் மீது போதையில் பைக்கை ஏற்றிய 4 இளைஞர்கள் கைது
திருவள்ளூர், 10 ஆகஸ்ட் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காய்கறி மார்க்கெட் அருகே நேற்று மாலை வழக்கம் போல் பெண் ஒருவர் பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள், நிலைத
திருத்தணி மார்க்கெட் அருகே பெண் மீது போதையில் பைக்கை ஏற்றிய 4 இளைஞர்கள் கைது


திருவள்ளூர், 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காய்கறி மார்க்கெட் அருகே நேற்று மாலை வழக்கம் போல் பெண் ஒருவர் பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள், நிலைதடுமாறி பலூன் வியாபாரி மீது வாகனத்தை ஏற்றியுள்ளனர். இதில் அந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், போதை இளைஞர்களின் செயலை தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நான்கு இளைஞர்களும், தட்டிக் கேட்ட நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்த விடீயோ இணையத்தில் தற்போது பரவி வருகின்றது.

மது போதையில் அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி போலீசார், படுகாயமடைந்த பலூன் வியாபாரி பெண்ணையும், தாக்குதலுக்கு உள்ளான நபரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, வன்முறையில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b