Enter your Email Address to subscribe to our newsletters

ஓசூர், 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, அச்சந்திரம் கிராமத்தில் இறங்க வேண்டிய பயணியை இரண்டு கிராமங்கள் கடந்து தும்மனப்பள்ளியில் இறக்கிவிட்டதாகக் கூறி, அரசு பேருந்து ஓட்டுநரிடம் பயணி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அச்சந்திரம் கிராமம் வழியாக அரசு பேருந்து சென்றபோது, அதில் பயணம் செய்த ஒருவர் அங்கு இறங்குவதற்காக தயாராக இருந்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதாகவும், இதனால் அந்தப் பயணி இரண்டு கிராமங்களை கடந்து தும்மனப்பள்ளி பகுதியில் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பயணி, ஓட்டுநரிடம் தனது எதிர்ப்பை தெரிவித்ததுடன், பேருந்தின் முன்பக்கத்தில் நின்றபடியே ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பேருந்து இயக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அவர் முன்பக்கத்தில் நின்றபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ததால் சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பயணியின் செயலால் பேருந்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டதுடன், பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்தது. சம்பவம் தொடர்பான தகவல் போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்ற நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ