Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு கணிசமாக உயர்த்தி வழங்கியுள்ளது.
சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு, மத்திய அரசு சார்பில் ஒரு டன்னுக்கு ரூபாய் 3,290.50 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.709.50 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (ஆகஸ்ட் 10, 2026) சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்த ஊக்கத்தொகை உயர்வின் மூலம், கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு மொத்தமாக ரூபாய் 4,000 கிடைக்கும். கடந்த காலங்களை ஒப்பிடும்போது, மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூபாய் 134-க்கும் மேல் கூடுதலாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பேசிய முதல்வர் விஜய்,
விவசாயிகளை நம் அரசு எப்போதும் கைவிட்டு விடாது. விவசாயிகளுக்கு தோளோடு தோளாக, ஆதரவாக என்றும் துணை நிற்போம் என்று உறுதியளித்தார்.
தமிழக வரலாற்றிலேயே கரும்புக்கான ஊக்கத்தொகை ஒரே ஆண்டில் டன்னுக்கு ரூ.360.50 வரை உயர்த்தப்பட்டு, மொத்த விலை ரூ.4,000 ஆக வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Hindusthan Samachar / vidya.b