Enter your Email Address to subscribe to our newsletters

மேட்டூர், 10 ஆகஸ்ட் (ஹி.ச)
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் என்னும் ஊரில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் மூலம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள சுமார் 16.05 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக 5,543 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 5,311 கன அடியாக சரிந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 78.69 அடியாக உள்ளது. அணையின் மொத்த உயரம் 120 அடி ஆகும். அணையில் தற்போதைய நீர் இருப்பு 40.66 டி.எம்.சி.யாக பதிவாகியுள்ளது.
இதனிடையே டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலையில், குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b