Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச)
சென்னை சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானத்தை வரவேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆற்றிய உரை பேரவையில் கவனம் ஈர்த்தது.
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா என்பது அறிவையும், மொழியையும், பண்பாட்டையும் போற்றும் மேடையாக இருக்க வேண்டும். ஆனால் அங்கு தமிழக அரசின் அரசுப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் முதலாவதாகப் பாடப்பட வேண்டிய தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் அளிக்கப்பட்டது தமிழ் மொழியை அவமதிக்கும் செயல் என்றும், இது மாநில தன்னாட்சி மீதான தாக்குதல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 176-ன்படி பேரவை கூட்டத் தொடரின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்பதே மரபு. அந்த மரபைக் காக்கும் வகையிலும், தமிழ் மொழியின் பெருமையை நிலைநாட்டும் வகையிலும் முதலமைச்சர் கொண்டுவந்துள்ள இந்த தனித் தீர்மானம் மிகவும் அவசியமானது என்று கூறிய மாரிமுத்து, இந்த தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை அளிப்பதாக அறிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b