Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதிய கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் அவசியம் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கான நோட்டீஸை காங்கிரஸ் எம்.பி. மனிஷ் திவாரி இன்று அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள நோட்டீஸில்,
உண்மையான சித்தாந்த அல்லது கொள்கை வேறுபாடுகள் ஏதுமின்றி சந்தர்ப்பவாதத்தால் உந்தப்படும் கூட்டு அரசியல் கட்சித் தாவல்களை தடை செய்யும் அதே வேளையில், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும், சட்டமன்றங்களிலும் நேர்மையான மற்றும் ஆக்கப்பூர்வமான கருத்து வேறுபாட்டிற்கு இடமளிக்கும் வகையிலான புதிய கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் வரையறைகள் குறித்து விவாதிப்பதற்காக கேள்வி நேரம், பூஜ்ய நேரம் உள்ளிட்ட அன்றைய பட்டியலிடப்பட்ட அனைத்து அலுவல்களையும் இந்த அவை ஒத்திவைக்க வேண்டும் என நான் முன்மொழிகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள கட்சித் தாவல் தடைச் சட்டமானது பத்தாவது அட்டவணை என அழைக்கப்படுகிறது. 1985-ஆம் ஆண்டு 52-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இது அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
கட்சி மாறும் அல்லது கட்சித் தாவலில் ஈடுபடும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
இது அரசியலமைப்பின் 102(2) மற்றும் 191(2) பிரிவுகளின் கீழ் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b