மேகமலை மலைக்கிராம மக்களின் எதிர்காலத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் – வைகோ
சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்களின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தியுள
Vaiko


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்களின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வண்டியூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளதாகவும், அங்கு பல தலைமுறைகளாக மக்கள் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இலவம் பஞ்சு, முந்திரி, காய்கறிகள் உள்ளிட்ட விவசாயப் பணிகளே அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பகுதி கடந்த 2021ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகம் பகுதியாக அறிவிக்கப்பட்டது. விருதுநகர், தேனி, மதுரை மாவட்டங்களில் பரவியுள்ள இந்தப் புலிகள் காப்பகத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம் மற்றும் மேகமலை வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட பகுதிகளில் 1,01,657.13 ஹெக்டேர் நிலங்கள் இணைக்கப்பட்டதாக வைகோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேனி மாவட்டத்தின் கண்டமனூர், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூர் வனசரகங்களுக்கு உட்பட்ட சுமார் 5,000 ஹெக்டேர் மலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறை அனுமதியின்றி சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவை செயல்படுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மே 29ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, மேகமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையின்படி, தேனி மாவட்டம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் 4,601 ஆக்கிரமிப்பாளர்கள் 5,072.653 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பான அறிக்கையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு (CEC) தாக்கல் செய்த அறிக்கைகளில், வனப்பகுதி சார்ந்த மலைச்சரிவுகளில் இலவம் பஞ்சு, ஏலக்காய், எலுமிச்சைப்புல், முந்திரி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருப்பதாகவும், இது தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டம், 1955-ஐ மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வைகோ கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், அப்பகுதியில் ‘மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு செயல் திட்டம்’ வகுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான காலக்கெடுவுடன் கூடிய திட்டத்தை சிஇசியிடம் அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், வனப்பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளை ஆறு மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் மின்சாரம், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட அரசு வசதிகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் வரை புதிய வணிக அல்லது வனம் சாராத திட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வன உரிமைகள் சட்டம் 2006-ன் கீழ், குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாழ் மக்களுக்கு வன நிலத்தின் மீதான உரிமைகள் வழங்கப்படுவதற்கான சட்டப்பூர்வ பாதுகாப்புகள் இருப்பதாக வைகோ சுட்டிக்காட்டியுள்ளார். உரிமைக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவடையும் வரை, வனப்பகுதியில் வசிப்பவர்களை கட்டாயமாக வெளியேற்றக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளிகள், மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக குறிப்பிட்ட வரம்புகளுக்குள் வன நிலத்தை பயன்படுத்த வன உரிமைகள் சட்டம் வழிவகை செய்வதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மேகமலைப் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பல தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்கால வாழ்க்கையையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ