மேகதாது அணை விவகாரத்தில் தமிழக-கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம் - ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம்
கிருஷ்ணகிரி, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில், அதற்கு தமிழக அரசு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்
Mekedatu Dam Issue: Kannada groups protest


கிருஷ்ணகிரி, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில், அதற்கு தமிழக அரசு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன.

கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூர் எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளன.

சேலம், தருமபுரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் ஓசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளதுடன், கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகளும் அத்திப்பள்ளி அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழக - கர்நாடக எல்லையான ஓசூரை அடுத்துள்ள பகுதிகளில் இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தப் போராட்டம் நிறைவு பெறும் வரை பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில் எல்லையோரப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b