Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வரும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை உயர்த்துவது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் புதிய குழு அமைக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து புதிய குழு விரிவாக ஆய்வு செய்யும் என்றும், அந்தக் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்றும் கூறினார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டது. அந்தக் குழு, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் வரை உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரைத்திருந்தது. அதன் பின்னர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.
இந்த 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு தற்போது மருத்துவப் படிப்புகள் மட்டுமின்றி பொறியியல் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2026-ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையிலும் 7.5 சதவீத அரசுப்பள்ளி மாணவர் ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை, 2025–26 கல்வியாண்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 613 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போதைய 7.5 சதவீத இடஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு போதுமானதாக உள்ளதா, அதை மேலும் அதிகரிக்க முடியுமா என்பது குறித்து புதிய நீதியரசர் தலைமையிலான குழு ஆய்வு செய்ய உள்ளது.
குழுவின் பரிந்துரை கிடைத்த பின்னரே இடஒதுக்கீட்டை எந்த அளவுக்கு உயர்த்துவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam