Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், வளாகத்திற்கு வெளியே கடும் போக்குவரத்து நெரிசலும், உள்ளே பெரும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியதாக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுவதும், அதன் காரணமாக நெரிசல் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். விதிமீறல்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறை கண்டும் காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
வாகன நிறுத்துமிடம், வெளியேறும் வழிகள் உள்ளிட்டவை ஏற்கனவே சிக்கலுக்குரியதாக உள்ள நிலையில், வளாகத்திற்குள் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், சனிக்கிழமை நிகழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது என கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் வணிக வளாக நிர்வாகத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும், பெரும் கூட்டம் கூடுவதால் சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே கணித்து தடுக்கத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றும் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இத்தகைய பெரும் கூட்டங்களை சமாளிக்கும் வகையில் ஃபீனிக்ஸ் வணிக வளாகம் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளதா, கட்டுமான விதிமீறல்கள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ