லஞ்ச வழக்கில் சிறை சென்ற நிர்வாகி நீக்கம் - அவரது மனைவிக்கே அதே பதவியை வழங்கிய தமிழக வெற்றிக் கழகம்
செங்கல்பட்டு , 10 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட இணைச் செயலாளராக பதவி வகித்து வந்த வீராசாமி என்பவர் சாலைப் பணி தொடர்பாக ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூபாய் ஒரு லட்சத்து முப்பதாயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இத
லஞ்ச வழக்கில் சிறை சென்ற நிர்வாகி நீக்கம் - அவரது மனைவிக்கே அதே பதவியை வழங்கிய தமிழக வெற்றிக் கழகம்


செங்கல்பட்டு , 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட இணைச் செயலாளராக பதவி வகித்து வந்த வீராசாமி என்பவர் சாலைப் பணி தொடர்பாக ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூபாய் ஒரு லட்சத்து முப்பதாயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகக் கருதி தமிழக வெற்றிக் கழக தலைமை உடனடியாக வீராசாமியை மாவட்ட இணைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், பதவியில் இருந்து நீக்கப்பட்ட வீராசாமியின் மனைவி ஹேமாவதிக்கு தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. காலியாக இருந்த அதே செங்கல்பட்டு மாவட்ட இணைச் செயலாளர் பதவிக்கு ஹேமாவதியை நியமித்து கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஊழலுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்படுவோம் என்றும், லஞ்ச ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் பொதுக்கூட்டங்களில் பேசியிருந்தார்.

ஆனால், லஞ்சப் புகாரில் சிக்கிய ஒருவரது குடும்பத்திற்கேமீண்டும் அதே பொறுப்பை வழங்கியிருப்பது, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மற்றும் மாற்று அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b