சாலை வசதி கேட்டு தலைமைச் செயலகம் நோக்கி நடைபயணம் - மாணவர்கள், பொதுமக்களை தடுத்து நிறுத்தியதாக புகார்
புதுக்கோட்டை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சாலை வசதி கோரி பல ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி, 8 கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தலைமைச் செயலகம் நோக்கி நடைபயணம் மேற்கொண்டன
போராட்டம்


புதுக்கோட்டை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சாலை வசதி கோரி பல ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி, 8 கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தலைமைச் செயலகம் நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர்.

புலியூர், செட்டிபட்டி, உறவிக்காடு உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், தங்களது சாலை வசதி கோரிக்கையை தமிழக முதலமைச்சரிடம் நேரில் மனுவாக அளிப்பதற்காக இன்று சென்னை நோக்கி நடைபயணமாக புறப்பட்டனர்.

புதுக்கோட்டை–திருச்சி மாவட்ட எல்லைப் பகுதியில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, கீரனூர் வட்டாட்சியர் மற்றும் டி.எஸ்.பி. மணிமாறன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், நடைபயணத்தை கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு அதிகாரிகள் மற்றும் போலீசார் கடுமையாக எச்சரித்ததாகவும், அதையும் மீறி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து சென்றதால் அவர்களை தாக்கி கைது செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவர்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மற்றும் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து அப்பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam