Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியுள்ளது.
ஆடி அமாவாசை திருவிழா வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் 13-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலின் அடிவாரமான தாணிப்பாறை பகுதியில் திரண்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தின் சோதனைக்குப் பிறகு மலைப்பாதையில் சென்று சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
சதுரகிரி கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் குறிப்பிட்ட நாட்களுக்கு பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவது வழக்கம்.
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பக்தர்கள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இரவில் கோயில் பகுதியில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
மேலும், தீப்பற்றக்கூடிய பொருட்களை மலைப்பகுதிக்குள் எடுத்துச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்களின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி சதுரகிரியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam