தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம் - தி.மு.க ஆதரவு
சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.) சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் வகையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக தரப்பில் முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரவையில் பேசிய திமுக முன்னாள் அமைச்ச
Separate resolution on 'Tamil Thai Vazhthu' – DMK supports it.


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் வகையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக தரப்பில் முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேரவையில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன்,

முதல்வர் விஜய் முன்மொழிந்த தனித் தீர்மானத்தை மனதார வழிமொழிவதாக குறிப்பிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் பாடல் அல்ல, அது தமிழர்களின் உயிர் மூச்சு, அடையாளம் மற்றும் பண்பாட்டின் சின்னம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவதும், அதற்கு முதலிடம் தருவதும் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபு என்றும், அந்த மரபை இனி வெறும் வழக்கமாக மட்டும் இல்லாமல் சட்டமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் கோவி.செழியன் வலியுறுத்தினார்.

முதல்வரின் இந்த தனித் தீர்மானம் தமிழ் மொழியின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தும் முயற்சி என்று பாராட்டிய அவர், இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை திமுக முழுமையாக வரவேற்று ஆதரிக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த தீர்மானத்தை வரவேற்று, ஆதரித்து பேசிய கோவி.செழியன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என முதலில் அரசாணை வெளியிட்டவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி என்று சுட்டிக்காட்டினார். இதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயம் பாட வேண்டும் என 2021 டிசம்பர் 17-ல் அரசாணை வெளியிட்டார் ஸ்டாலின் என்றும் நினைவு கூர்ந்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரின் பெயரில் உள்ள பல்கலைகழகத்திலேயே 3ஆம் இடத்திற்கு தமிழ்த்தாய் வாழ்த்து தள்ளப்பட்டது மிகுந்த அதிர்ச்சியான மற்றும் அவமானகரமான விஷயம்.

தமிழ்த்தாய் வாழ்த்தை பொறுத்த வரை அடிக்கடி மாறுபடும் இது போன்ற சூழலை மாற்றிட, அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை சட்டமாக மாற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோவி.செழியன் குறிப்பிட்டார்.

Hindusthan Samachar / vidya.b