Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரமும், அதைத் தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என மத்திய அரசின் புதிய அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வேண்டும் என எங்கும் வற்புறுத்தப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கவும், தேசிய கீதத்துடன் நிறைவு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளதால், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனத் தெரிவித்தார்.
மேலும், அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரமும், தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என மட்டுமே அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாகவும், மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வேண்டும் என எந்த வற்புறுத்தலும் இல்லை என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P