Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
சட்டப்பேரவையில் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., புரிதல் இல்லாமல் “மத்திய அரசு இதில் தலையிட முடியாது” என்ற வார்த்தைகளை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பெருமை சேர்க்கும் இடத்திலும் மத்திய அரசின் மீதான வன்மத்தை வெளிப்படுத்தியதாக பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய உள்துறை அமைச்சரிடம் இருந்து வந்த சுற்றறிக்கையில், அந்தந்த மாநில பாடல் மூன்றாவதாக பாடப்பட வேண்டும் என்று எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.
அந்த சுற்றறிக்கையில், புதிதாக ‘வந்தே மாதரம்’ பாடல் சேர்க்கப்படுவதால், வந்தே மாதரம் பாடல் தேசிய கீதத்திற்கு முன்னதாக பாடப்பட வேண்டும் என்றும், வந்தே மாதரம் முழுமையாக பாடப்பட வேண்டும் என்றும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதல் இடம் அளிக்கப்படுவது நம் அனைவருக்கும் பெருமைதான். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலப் பாடலை மூன்றாவதாக பாட வேண்டும் என்று வலியுறுத்துவதாக சிலர் பேசுவது சரியல்ல.
இன்று திருக்குறள் நமக்கு பெருமை சேர்க்கிறது என்று தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், திருக்குறளை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர் நமது பாரத பிரதமர் என்பதை பெருமையோடு இங்கே நினைவுகூருகிறேன்.
அதுமட்டுமல்லாமல், புதிய கல்விக் கொள்கையிலும் மாநில மொழிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் இங்கே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மத்திய அரசின் சுற்றறிக்கையை தவறாகப் புரிந்துகொண்டு அல்லது தவறாக விளக்கி அரசியல் செய்வது சரியல்ல என்று இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ