சுதர்ஷன் ரெட்டி குடும்பத்துக்கு பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் கே.சி.ஆர். ஆறுதல்- ரூ.2¼ கோடி நிதியுதவி வழங்கினார்
நல்லபெல்லி , 10 ஆகஸ்ட் (ஹி.ச.) வரங்கல் மாவட்டம் நல்லபெல்லியில் மறைந்த நர்சம்பேட் முன்னாள் எம்.எல்.ஏ. பெத்தி சுதர்ஷன் ரெட்டியின் 10-ம் நாள் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பி.ஆர்.எஸ். கட்சித் தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்-மந்திரியுமான கே.
A


நல்லபெல்லி , 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

வரங்கல் மாவட்டம் நல்லபெல்லியில் மறைந்த நர்சம்பேட் முன்னாள் எம்.எல்.ஏ. பெத்தி சுதர்ஷன் ரெட்டியின் 10-ம் நாள் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பி.ஆர்.எஸ். கட்சித் தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்-மந்திரியுமான கே.சி.ஆர். கலந்து கொண்டு, சுதர்ஷன் ரெட்டியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

நல்லபெல்லியில் உள்ள சுதர்ஷன் ரெட்டியின் இல்லத்துக்கு சென்ற கே.சி.ஆர்., முதலில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது சுதர்ஷன் ரெட்டியுடனான தனது நீண்டகால நட்பை நினைவுகூர்ந்த கே.சி.ஆர்., அவரது மறைவு பி.ஆர்.எஸ். கட்சிக்கும், தெலங்கானா இயக்கத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று வேதனை தெரிவித்தார்.

சுதர்ஷன் ரெட்டி மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் என்றும், தெலங்கானா மாநிலத்துக்கான போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சிறந்த தலைவராக விளங்கியவர் என்றும் கே.சி.ஆர். புகழாரம் சூட்டினார்.

அவரது குடும்பத்துக்கு கட்சியும், தானும் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று அவர் உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து, பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.2¼ கோடி நிதியுதவிக்கான காசோலைகளை கே.சி.ஆர். சுதர்ஷன் ரெட்டியின் குடும்பத்தினரிடம் நேரடியாக வழங்கினார்.

அவரது 2 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.1 கோடியும், அவரது தாயார் அமிர்தம்மாவின் பராமரிப்புக்காக ரூ.25 லட்சமும் வழங்கப்பட்டது.

குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் மற்றும் குடும்பத்தின் நலன் ஆகியவற்றை கட்சி தொடர்ந்து கவனித்துக் கொள்ளும் என்றும் கே.சி.ஆர். தெரிவித்தார்.

சுதர்ஷன் ரெட்டியின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கட்சி தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

கே.சி.ஆர். வருகையையொட்டி நல்லபெல்லியில் ஏராளமான பி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டனர்.

சுதர்ஷன் ரெட்டியின் இல்லம் முன்பு கூட்டம் அதிகரித்ததால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், கே.சி.ஆரின் வாகன அணிவகுப்பு செல்வதற்கும் வழி ஏற்படுத்தினர்.

கே.சி.ஆருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் உடன் வந்திருந்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA