Enter your Email Address to subscribe to our newsletters

ஈரான், 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் பதற்றம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த நீரிணை வழியாக புதிய கப்பல் போக்குவரத்து பாதைகளை திறப்பது தொடர்பாக ஓமன் நாட்டுடன் ஈரான் முக்கிய ஒப்பந்தம் ஒன்றை எட்டும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவது அமெரிக்காவின் முடிவை பொறுத்தே அமையும் என தெஹ்ரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உலகின் மொத்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இங்கு ஏற்படும் சிறு தடங்கலும் உலக சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். இந்த சூழலில், கப்பல் போக்குவரத்தை சீரமைத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஓமன் அரசுடன் ஈரான் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
எனினும், இந்த நீர்வழிப்பாதையை முழுமையாகவும் பாதுகாப்பாகவும் திறந்துவிட அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றியாக வேண்டும் என ஈரான் வலியுறுத்துகிறது. இதற்காக இரண்டு முக்கிய நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
கடந்த காலத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனைகள்.
இது குறித்து பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்கா தனது கோரிக்கைகளுக்கு செவிசாய்காத வரை வாஷிங்டனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
ஓமனுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், இறுதி முடிவு அமெரிக்காவின் கையில்தான் உள்ளது என்பதே ஈரானின் நிலைப்பாடு.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய தலைவர்களுக்கு இடையே தொடர்ந்து பரிமாறப்பட்டு வரும் கடுமையான அறிக்கைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திரம் எவ்வளவு பலவீனமான நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
பேச்சுவார்த்தைகள் இழுபறியில் நீடிக்கும் வேளையில், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளும், எதிரி நாடுகளும் தங்களது சொந்த நலன்களுக்காக காய் நகர்த்தி வருகின்றன.
இது அப்பகுதியில் நிலவும் நிலையற்ற தன்மையை மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b