Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திரன்(32). தனியார் உணவகத்தில் ஊழியராக பணியாற்றி வரும் இவருக்கு அன்புராணி(26) என்ற மனைவியும் 4 பிள்ளைகளும் இருந்து வருகின்றனர்.
திருமணமாகி 11 ஆண்டுகளான நிலையில் தனது மனைவி அன்புராணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு ராமச்சந்திரன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அதன்படி இன்று காலை வழக்கம் போல் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கணவருடன் சண்டையிட்டு விட்டு வீட்டில் இருந்து மனைவி அன்புராணி வெளியேறி சாலையில் நடந்து சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் ராமச்சந்திரன், வீட்டில் கழிவறை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து கொண்டு இருச்சக்கர வாகனத்தில் தனது மனைவி அன்புராணியை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
அப்போது திருவிக வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தனது மனைவி அன்புராணியை வழிமறித்து நிறுத்தி பாட்டிலில் இருந்த ஆசிட்டை மனைவி அன்புராணியின் முகத்தில் வீசி விட்டு தப்பியோடிவிட்டார்.
முகத்தில் ஆசிட் பட்டதும் வலியால் அலறி துடித்ததைக் கண்டதும் அப்பகுதியில் சாலையில் சென்று பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஆசிட் வீசியதில் படுகாயமடைந்த அன்புராணியை மீட்டு அப்பகுதி பொதுமக்கள் விழுப்புரம் நகராட்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து விழுப்புரம் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி முகத்தில் ஆசிட் வீசி விட்டு தப்பியோடிய கணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டபகலில் நடுரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிவிட்டு ஒருவர் தப்பியோடிய சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN