Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர் , 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடற்கரை பகுதியில் இன்று காலை சுமார் 3 டன் எடை கொண்ட 30 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் கடல் அலையில் சிக்கி திசைமாறி வந்து கரைப் பகுதியில் உள்ள மணல் திட்டில் சிக்கிக் கொண்டது.
இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டதால் கடற்கரையில் பரபரப்பு நிலவியது. கரை ஒதுங்கிய திமிங்கலம் உயிருடன் இருப்பதை கண்ட மீனவர்கள் அதனை காப்பாற்ற முடிவு செய்தனர்.
உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து திமிங்கலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கடல் நீரை தொடர்ந்து திமிங்கலத்தின் மீது ஊற்றி அதனை உயிருடன் வைத்திருக்க போராடினர். பின்னர் கயிறுகள் மற்றும் படகுகளின் உதவியுடன் பல மணி நேரம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த ராட்சத திமிங்கலத்தை மீண்டும் ஆழ்கடலுக்குள் பத்திரமாக இழுத்துச் சென்று விட்டனர்.
திமிங்கலம் பாதுகாப்பாக கடலுக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே அதிகாரிகளும் மீனவர்களும் நிம்மதியடைந்தனர். மீனவர்களின் இந்த மனிதநேய செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b