காவிரி நீர் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் 13-ந் தேதி விசாரணை
புதுடெல்லி , 10 ஆகஸ்ட் (ஹி.ச.) காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு, சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 13-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகார
A


புதுடெல்லி , 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு, சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 13-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடக அரசின் அலட்சிய போக்கால் காவிரியை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நடப்பு பாசன ஆண்டில் ஏற்பட்டுள்ள 26.954 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் கர்நாடகா தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விட வேண்டும் என்று கோரி, தமிழக அரசு சார்பில் கடந்த 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், ஆகஸ்டு 12-ந் தேதிக்குள் பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீர் வந்து சேரும் வகையில் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்பு முறையிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு வருகிற 13-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

தமிழக அரசு மனுவுடன், காவிரி நீரை திறக்கக்கோரி தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவும் அன்றைய தினம் விசாரணைக்கு வருகிறது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், 13-ந் தேதி நடைபெற உள்ள சுப்ரீம் கோர்ட்டு விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA