Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பாக்கு பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி வெளி மாநிலங்களில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன் தலைமையிலான போலீசார் ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தினர்.
போலீசாரை கண்டதும் காரை அங்கேயே நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் இறங்கி தப்பி ஓடிவிட்டனர். காரை சோதனை செய்ததில் மூடைகளில் இருந்த 436 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஒட்டன்சத்திரம் எஸ்.ஐ., சிவராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடியவர்களை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமரா, அலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது.
அங்கு சென்ற போலீசார் சேலத்தை சேர்ந்த ஹரிஷ் 38, பவராம் 36, ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ்குமார் 19, சத்ரா ராம் என்ற சதீஷ் 25, ஆகிய நால்வரை கைது செய்தனர். 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த குட்கா பொருட்களை எங்கிருந்து கொண்டு வந்தார்கள், யாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b