Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
நடிகர் விக்ரம் அரிய வகை குரங்குடன் இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அக்கரையில் உள்ள மறைந்த மு.க. முத்துவின் வீட்டிற்கு வனத்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். நடிகர் விக்ரமின் மகள், மறைந்த மு.க. முத்துவின் பேரனை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது மகளை பார்ப்பதற்காக நடிகர் விக்ரம் மு.க. முத்துவின் வீட்டிற்கு சென்றபோது, சிலர் அரிய வகையைச் சேர்ந்த லார் கிப்பான் (Lar Gibbon) குரங்கை விற்பனை செய்வதற்காக அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்த குரங்கை நடிகர் விக்ரமின் மகள் வாங்க திட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து குரங்கை வாங்கி, அதனுடன் வீடியோ எடுத்த நடிகர் விக்ரம், அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக தெரிகிறது.
பின்னர் குரங்கை வாங்குவதில் விருப்பம் இல்லாததால், அதனை மீண்டும் விற்பனையாளர்களிடமே திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த குரங்கை உரிய ஆவணங்களுடன் விற்பனை செய்வதற்காக வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், குரங்கை விற்பனை செய்ய வந்த நபர் உண்மையில் உரிய ஆவணங்களை வைத்திருந்தாரா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் PARIVESH 2.0 இணையதளம் மூலம் லார் கிப்பான் குரங்கை விற்பனை செய்வதற்கான உரிய அனுமதி பெறப்பட்டிருந்ததா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P