அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதை எதிர்த்த வழக்கு வாபஸ்
சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை, அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்ததைத் தொடர்ந்து மனுதாரர் வழக்க
உயர்நீதிமன்றம்


சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை, அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்ததைத் தொடர்ந்து மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு கடந்த மே 13-ம் தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தபோது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதேபோல், கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்ததாகக் கூறி 22 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட 25 எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் ராஜினாமா செய்த நிலையில், மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரி கடிதம் அளித்தனர்.

இதையடுத்து, அவர்களுக்கு எதிராக எடுக்கக் கோரிய தகுதி நீக்க நடவடிக்கை மனுவை திரும்பப் பெறுவதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் அளித்தார்.

இதேபோல், 22 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கோரிய மனுவையும் திரும்பப் பெறுவதாக விஜயபாஸ்கர் தரப்பில் சபாநாயகருக்கு கடிதம் அளிக்கப்பட்டது.

இந்த இரு கடிதங்களையும் ஏற்றுக்கொண்ட சபாநாயகர், மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக அறிவித்தார்.

இதனை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டப்படி 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்புக் கோரி கடிதம் அளித்துள்ளதால் தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த நடவடிக்கையால் மனுதாரர் சார்ந்த கட்சி எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாகவும் எச்சரித்தனர்.

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற்றதாகக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam