Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச)
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் முதலமைச்சர், தமிழ்நாடு முழுவதும் நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதன்படி சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600-ம், சன்ன ரக நெல்லுக்கு ரூ.2,750-ம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்த கொள்முதல் விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.
விவசாயிகளின் உற்பத்திச் செலவு, இடுபொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும்.
தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. அந்த வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்.
மத்திய அரசு தற்போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,041 குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொகை ரூ.2,369 ஆக இருந்தது. தமிழக அரசின் மாநில ஊக்கத்தொகையாக கடந்த ஆண்டு குவிண்டாலுக்கு ரூ.131 வழங்கப்பட்டதால், மத்திய அரசின் ஆதரவு விலையுடன் சேர்த்து விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.2,500 கிடைத்தது.
தற்போது மத்திய அரசின் ஆதரவு விலை ரூ.2,041 ஆக உள்ள நிலையில், தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ.159 ஆக உள்ளது.
இதனால் மத்திய அரசின் ரூ.2,041 மற்றும் தமிழக அரசின் ரூ.159 ஊக்கத்தொகை என மொத்தம் ரூ.2,600 மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழக அரசின் ஊக்கத்தொகை ரூ.28 மட்டுமே கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இது விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.
தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்யும் நெல்லில் சுமார் 95 சதவீதம் சாதாரண ரக நெல்லாகவும், உயர்ரகமான சன்ன ரகம் சுமார் 5 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். எனவே பெரும்பான்மையான விவசாயிகள் பயனடையும் வகையில் சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு மேலும் அதிகரிக்க வேண்டும் என்றார்.
பிற மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் வழங்கப்படும் தொகை மிகவும் குறைவாக உள்ளது.
ஒடிசாவில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.800 ஊக்கத்தொகையும், கேரளாவில் ரூ.650 ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு சுமார் ரூ.150 மட்டுமே மாநில அரசின் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
எனவே, தற்போதைய சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நெல் கொள்முதல் விலையை மேலும் ரூ.400 உயர்த்தி, ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,000 வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும். தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கரும்பு கொள்முதல் விலையைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு டன் ஒன்றுக்கு ரூ.709 கூடுதல் தொகை வழங்கி, மொத்த கொள்முதல் விலை ரூ.4,000 என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதனை பாமக வரவேற்றது.
அதேவேளையில், கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டில் கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
அடுத்த ஆண்டு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்கும் வகையில் கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
சென்னையில் தற்போது ஆவின் பால் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உகந்த, கலப்படமில்லாத ஆவின் பாலை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால், தற்போது ஆவின் நிறுவனத்திற்கான பால் கொள்முதல் குறைந்துள்ளதால் சென்னையில் பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
2022-23ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது நாளொன்றுக்கு சுமார் 28 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய கொள்முதல் விலையை வழங்கினால்தான் அவர்கள் தொடர்ந்து ஆவினுக்கு பால் வழங்க முன்வருவார்கள்.
எனவே, பால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கொள்முதல் விலையையும் தமிழக அரசு உயர்த்த வேண்டும்.
நெல், கரும்பு, பால் ஆகியவற்றின் கொள்முதல் விலையை உயர்த்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / P YUVARAJ